திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (18:19 IST)

திமுகவிடம் மன்னிப்பு கேட்க தேமுதிக முயற்சி: இணையத்தில் கசியும் ரகசிய சந்திப்பு குறித்த தகவல்

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவை இழுக்க திமுக தலைவர் கருணாநிதி பல முறை முயற்சி மேற்கொண்டார். ஆனால் தேமுதிக மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்தது.


 
 
திமுக கூட்டணியில் தேமுதிகவை சேரவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்தவர் பிரேமலதா தான். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் அவர். ஆனால் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக அமைந்து மீண்டும் ஆட்சியமைத்தார் ஜெயலலிதா.
 
திமுக வெற்றி பெற முடியாவிட்டாலும் வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்த தேமுதிகவின் நிலமை இந்த தேர்தலில் படு மோசமாகியது. கட்சியின் அங்கீகாரமே போய்விட்டது.
 
இந்நிலையில் திமுகவிடம் ஐக்கியமாக தேமுதிக விருப்பப்படுவது போல் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில் தேமுதிக இளைஞர் அணி தலைவரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ் திமுக மூத்த தலைவர் துரை முருகனை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
 
தங்களின் எதிர்காலம் மோசமாகிவிட்டதாலும், கலைஞரை சந்தித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க, விஜயகாந்தும், பிரேமலதாவும் விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்ய வழி செய்யுமாறு துரை முருகனிடம் சுதீஷ் கேட்டதாக ஃபேஸ்புக்கில் தகவல்கள் வருகின்றன.
 
அதற்கு பதில் அளித்த துரைமுருகன், கொஞ்சம் பொறுங்க, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடியட்டும், அதற்கு அப்புறம் வந்து கலைஞரைப் பாருங்க என்று கூறி சுத்தீஷை அனுப்பி வைத்துள்ளார் எனவும் பேசப்படுகிறது.