1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2015 (09:07 IST)

பருப்பு பதுக்கல்: தமிழக கிடங்குகளில் தீவிர சோதனை

தமிழகத்திலுள்ள கிடங்குகளில் பருப்பு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய மாநிலம் முழுவதும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை கடந்த இரண்டு வாரமாக உயர்ந்து வருகின்றது. இதனால், துவரம் பருப்பு கிலோ ரூ.210 வரை விற்கப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து,  பருப்பு வகைகளின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
இந்நிலையில், வட மாநிலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 ஆயிரம் டன் துவரம் பருப்பு கடந்த 2 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோல், பருப்பு பதுக்கலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
 
இதனால் மாநில அரசுகளும் பருப்பு வியாபாரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. அத்துடன் தனியார் நிறுவனங்களின் கிடங்குகளையும் மாநில அரசு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் பருப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவுத் துறையினருடன் இணைந்து பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் பருப்பு உற்பத்தி பெருமளவில் நடைபெறவில்லை என்பதால் பெரிய அளவில் பதுக்கி வைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், மாவட்டம்தோறும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.