பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 பணம்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு என்ன?
தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியுள்ள நிலையில், அதில் ரொக்க பணம் வழங்கவில்லை என்றும், எனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹2000 பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன் தாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், அதற்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார்.
இதனை அடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "பொங்கல் பரிசு தொகையுடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சிதான், ஆனால் இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு. ரொக்க பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva