வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மே 2023 (19:17 IST)

வெள்ளியங்கிரி மலையில் ‘சிவாங்கா’ பக்தர்களின் தூய்மைப் பணி!

vellingiri
கடற்படை அதிகாரிகளும் பங்கேற்பு
 
வெள்ளியங்கிரி மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கடந்த பத்து வருடங்களாக நடத்தப்படும் வருடாந்திர தூய்மைப் பணி நேற்று (மே 7) தொடங்கியது. இதில் ‘சிவாங்கா’ பக்தர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகளும் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுப்பட்டனர்.
 
கோவையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை வரலாற்று சிறப்பும் ஆன்மீக முக்கியத்துவமும் வாய்ந்தது. சிவனே வந்து அமர்ந்து சென்றதால் இம்மலை ‘தென் கயிலாயம்’ எனவும் அழைக்கப்படுகிறது. சவால் மிகுந்த இம்மலையில் மலையேற்றம் செய்வதற்கு கோடை காலத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மலையேறுவது வழக்கம்.
 
அவர்கள் விழிப்புணர்வு இன்றி விட்டு சென்ற குப்பைகளை சேகரிக்கும் பணியை தென் கயிலாய பக்தி பேரவை கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான தூய்மைப் பணி நேற்று (மே 7) தொடங்கியது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ‘சிவாங்கா’ பக்தர்களும், ஐ.என்.எஸ் அக்ரானி பயிற்சி மையத்திற்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படை அதிகாரிகளும் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். மலையேறியவர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகளை அவர்கள் சேகரித்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
 
இந்த தூய்மைப் பணியானது, வனத் துறையின் ஒத்துழைப்புடன் மே 14, 21, 28 மற்றும் ஜூன் 4 என அடுத்து வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்தப் புனித பணியில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் 83000 15111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.