1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (21:01 IST)

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி

Velliangiri
500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு
 
வனத்துறையுடன் இணைந்து தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரி மலையில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் சுமார் 1,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. 
 
இந்த புனிதப் பணியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் மே 7-ம் தேதி தொடங்கி உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்பணி நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலர்கள் மட்டுமின்றி இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். அடிவாரத்தில் தொடங்கி 4-வது மலை வரை இருந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் இந்த தூய்மை பணி கடந்த 10 வருடங்களாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்த தூய்மைப் பணியில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர் மனோகர் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது, “நான் ஒவ்வொரு வருடமும் சிவாங்கா மாலை அணிந்து சிவனை தரிசிப்பதற்காக இம்மலைக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருகிறேன். தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த தூய்மைப் பணியில் கடந்த 6 வருடங்களாக பங்கேற்று வருகிறேன். இந்தப் புனிதமான மலையை நாங்கள் எங்களுடைய சொந்த மலையை போல் பார்க்கிறோம். அடுத்த வரும் தலைமுறையினருக்கு இந்த மலையை தூய்மையாக வழங்குவது எங்களுடைய பொறுப்பு என்பதை உணர்ந்து இப்பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இப்பணி எனக்கு மகிழ்ச்சியையும், மன திருப்தியையும் அளிக்கிறது” என்றார்.
 
இதேபோல், சென்னையைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது அனுபவத்தை பகிரும் போது, “சென்னையில் இருந்து வரும் எனக்கு இந்த தூய்மை பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர்த்தியுள்ளது. இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது. மலை ஏறும் அனைவருக்கும் இம்மலையை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருக்க வேண்டும்” என்றார்.
 
ஊடக தொடர்புக்கு: 90435 97080, 78068 07107