செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (17:59 IST)

அரசியல் சாணக்கியன் ‘சோ’ உடல் நல்லடக்கம்

துக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், அரசியல் ஆலோசகருமான சோ ராமசாமி இன்று அதிகாலை காலமானார்.


 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 82.

மறைந்த சோ, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராகவும், நெருங்கிய நட்பாகவும் இருந்தார். அதுமட்டுமின்றி 1999-2005ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

மறைந்த சோ நடிகர்,இயக்குனர்,பத்திரிக்கையாளர் , நாடக ஆசிரியர் என்று பண்முக திறமை கொண்டவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். 5 படங்களை இயக்கியும் உள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த முகமது பி துக்ளக் இன்றளவும் பேசப்படும் படமாக உள்ளது.

எம்.ஆர்.சி. நகரில் வைக்கப்பட்டுள்ள சோ.ராமசாமிக்கு உடலுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்,  தமிழக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,  மு.க.அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, இந்து ராம், நக்கீரன் கோபால் ஆகியோரும் நேரில் சென்று அஞ்சல் தெரிவித்தனர்.

சினிமா நடிகர்கள் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், சிவக்குமார், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் அஜித் குமார், விவேக், நாசர், பொன்வண்ணன், இசை அமைப்பாளர்கள் கங்கை அமரன், கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, சோ.ராமசாமி உடல் மாலை எம்.ஆர்.சி. நகரில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் மாலை 06.30 மணியளவில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.