வியாழன், 13 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (12:58 IST)

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

சென்னையில் பறக்கும் மின்சார ரயில் சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள் தனியாக உள்ள நிலையில் மின்சார ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் பொதுமக்களின் பிரதான போக்குவரத்து மூலமாக மாநகர பேருந்துகளுக்கு பிறகு மின்சார ரயில் சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் இருந்து வருகிறது. தற்போது சென்னையில் பச்சை பாதை, நீலப் பாதை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மீத பாதைகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

 

இந்நிலையில் மின்சார ரயில் சேவைகளையும், மெட்ரோ சேவைகளையும் ஒருங்கிணைப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. அவ்வாறாக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சமீபமாகதான் இந்த பாதை முழுவதும் பராமரிப்பு பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது. வரும் 2028ம் ஆண்டு முதல் இந்த தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் வேளச்சேரியில் உள்ள புறநகர் ரயில் பணிமனை மெட்ரோ ரயில்களை பராமரிப்பதற்கு ஏற்ப மாற்றப்பட உள்ளது.

 

ஆனால் இந்த மாற்றத்தால் அவ்வழித்தடத்தில் வழக்கமான மின்சார ரயில்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டால் டிக்கெட் கட்டண அளவில் மெட்ரோ ரயிலில் மட்டுமே மக்கள் செல்ல வேண்டியிருக்கும் என்பது அனைத்து பயணிகளுக்கும் வசதியாக இருக்காது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

 

Edit by Prasanth.K