1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 28 மே 2014 (20:11 IST)

மோடியை பார்க்கக்கூட முடியவில்லை: பெரும் ஏமாற்றத்தில் விஜயகாந்த்

தேமுதிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி அல்லது மேல்–சபை எம்.பி. பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் விஜயகாந்த், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
 
தமிழகத்தின் பாஜக கூட்டணியின் பிரதான கட்சியாக தேமுதிக உள்ளது. 14 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும் தனது கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவியாவது பெற்று விட வேண்டும் என்று விஜயகாந்த் டெல்லி சென்றார்.
 
மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதும் அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தார். மோடியும் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, மனைவியுடன் சிறந்த முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி பாராட்டினார்.
 
மோடியின் பாராட்டை வைத்து தேமுதிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி அல்லது மேல்–சபை எம்.பி. பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.
 
இந்த நிலையில் திங்கட் கிழமை நடந்த மோடி பதவி ஏற்பு விழாவுக்கு விஜயகாந்த் அழைக்கப்பட்டார். இதை ஏற்று அவர் தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு ஓட்டலில் தங்கி இருந்த விஜயகாந்த் மாலையில் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு செல்ல தயாரானார். அப்போது அவருக்கு விழாவில் மிகவும் கடைசியாக பின் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் அவருக்கு போதிய அளவுக்கு நுழைவு சீட்டுக்களும் வழங்கப்படவில்லை. ஒரு நுழைவு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த விஜயகாந்த் கடைசி நேரத்தில் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லாமல் ஓட்டலிலேயே இருந்து விட்டார் என்று அவருக்கு நெருக்கமான கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
 
நேற்று விஜயகாந்த், பிரதமர் மோடியை சந்தித்து பேச முயற்சி செய்தார். ஆனால், சார்க் நாட்டு தலைவர்களுடன் மோடி தொடர்ந்து பேச்சு நடத்தியதால் விஜயகாந்த்துக்கு அனுமதி கிடைக்கவில்லை.
 
விஜயகாந்த் மோடியை சந்திக்கும் போது இலங்கை தமிழர் பிரச்சனை உள்பட பல்வேறு தமிழக பிரச்சினைகளை தீர்க்க கோரி மனு கொடுக்கவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால், மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காததால் விஜயகாந்த் ஏமாற்றம் அடைந்தார்.