காதலுக்காக காதலன்; காதலனுக்காக காதலி
மதுராந்தகம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால், காதலன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தி அறிந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.
மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்(18) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
விஜயகுமார் செல்வியை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு செல்வியின் தந்தையிடம் பெண் கேட்டுள்ளார். செல்வியின் தந்தை படிக்கிற பெண்ணை திருமணம் செய்து தர முடியாது, இந்த வயதில் எல்லாம் காதல் தேவையா என்று திட்டி பெண் கொடுக்க மறுத்துள்ளார்.
இதில் விரத்தியடைந்த விஜயகுமார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். தீக்குளித்த அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த செல்வி, விஜயகுமார் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று எண்ணி செல்வி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமாரும் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.