ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா தலைமையில், சுவாதி கொலை வழக்கு கைதி ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை நாளை நடைபெறுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட, மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18ம் தேதி புழல் சிறையில் மின் வயரைக் கடித்து மரணமடைந்தார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் ராம்குமார் உடலை பரிசோதனை செய்யும்போது தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டுமென ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரரின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை அனுமதித்தால், எல்லோரும் இதே போல கோரிக்கை விடுக்கக்கூடும் என அரசுத் தரப்பு கூறியது.
இதனால், மனு மீது முடிவெடுப்பதில் இரு நீதிபதிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.
அதன்படி, அந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், ராம்குமார் தந்தை தரப்பு கோரிக்கையை நிராகரித்தார்.
இந்நிலையில், தனியார் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் தலைமை நீதிபதியிடம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தங்களின் கோரிக்கை மனுவை விசாரிக்க வேண்டும் என்று ராம்குமார் தந்தை வலியுறுத்தினார்.
அதனை தலைமை நீதிபதி நிராகரித்து உச்ச நீதிமன்றம் செல்லும்படி அறிவுறுத்தினார். இதையடுத்து பரமசிவம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ராம்குமார் பிரேத பரிசோதனையின்போது தங்களது தரப்பு தனியார் மருத்துவரை கண்காணிப்பதற்காக அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு பிறகு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி பரமசிவத்தின் வழக்கை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், நாளை ராம்குமாருக்கு பிரேத பரிசோதனை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீதிபதி கிருபாகரன் உத்தரவின் பேரில் ராம்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவர் சுதிர் கே குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்கிறது.
பிரேத பரிசோதனைக்குப் பின் ராம்குமார் மரணம் குறித்தான உண்மை நிலவரம் உலகிறகு தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.