துவங்கிய வேட்பு மனு தாக்கல்: திணறும் அதிமுக தலைகள்!
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ராஜ்யசபா எம்பிக்களின் தேர்தல்:
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலியாக இருக்கும் நிலையில் இந்த பதவிகளுக்கு ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணி 2 எம்பிக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் கிடைக்கும் 4 எம்பிக்களில் 3 எம்பிக்கள் திமுகவும், ஒரு எம்பி காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கின்றன. அதிமுகவுக்கு கிடைக்கும் 2 எம்பிக்களில் கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் இல்லை. இருப்பினும் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.
இன்று முதல் வேட்புமனு தாக்கல்:
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31 ஆம் தேதி வரை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மாநிலங்களவை தேர்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும். ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுமாறும் அதிமுக:
வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை தேர்வு செய்ய கடந்த சில தினங்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அதிமுக வேட்பாளர் தேர்வு மீண்டும் மீண்டும் தள்ளி போகிறது. எனவே மனுதாக்கல் முடிவடைவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் அதிமுக வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.