வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:50 IST)

சுதந்திர தினத்தை முன்னிட்டு புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளுக்கு வாழும் மெழுகு அருங்காட்சியகம்! - ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் அசத்தலான புகழாஞ்சலி!

Isha

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது.

 

 

நம் பாரதத்தின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வாழும் மெழுகு அருங்காட்சியகத்தை அமைத்து இருந்தனர். பொதுவாக மெழுகு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட மனிதரின், அசலான தோற்றத்தில் மெழுகுச் சிலைகள் செய்து வைக்கப்பட்டு இருக்கும். 

 

ஆனால் இந்த வாழும் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் இல்லாமல், மாணவர்களே நம் பாரத தேசத்தின் புகழ்பெற்ற நாயகர்கள் போன்று வேடமணிந்து இருந்தனர். இதில் மொத்தம் 40 நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நபர்கள் அரசியல், விளையாட்டு, பாரம்பரிய நடனக் கலை, மற்றும் கல்வி என அனைத்து துறைகளையும் சேர்ந்த வாழ்ந்து மறைந்த மற்றும் நம் காலத்தில் வாழ்கின்ற ஆளுமைகளாக இருந்தனர்.

 

குறிப்பாக அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், இந்திரா காந்தி ஆகிய தேசத் தலைவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற இசைத்துறை கலைஞர்கள்,  ஜி.டி. நாயுடு, சி.வி. ராமன், ஹோமி பாபா, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் ஆகிய பெண் சாதனையாளர்கள் என 78 புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் தோற்றத்தில் மாணவர்கள் உடையணிந்து இந்த அருங்காட்சியகத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

அருங்காட்சியகத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு நிலையத்திற்கும் முன் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. அதை அழுத்தினால் அந்த நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் குறித்த குறிப்புகளை மாணவர்கள் சொல்லும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். 

 

Wax Statue
 

இதில் சிறப்பு விருந்தினராக 'கரடி டேல்ஸ் பதிப்பகத்தின்' உரிமையாளரும், எழுத்தாளருமான ஷோபா விஸ்வநாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வு குறித்து அவர் கூறுகையில் "இந்த வாழும் அருங்காட்சியகம் படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மதிநுட்பமான வெளிப்பாடாக இருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈர்க்கக்கூடிய முயற்சியால் வரலாறு உயிர்ப்பிக்கப்பட்டு இருந்தது.

 

நம் பாரதத்தின் அடையாளங்களாக இருக்கும் நாயகர்கள் போன்று விரிவான விவரங்களுடன் வேடமணிந்து இருந்தது அவர்களின் அர்ப்பணிப்பை கண்கூடாகத் காட்டியது. மேலும் உரையாடும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருந்ததால், இந்த அனுபவம் கற்றுக்கொள்ளவும், ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது. என்னைப் பொறுத்த வரையில் ஆழ்ந்த கற்றல் ஆற்றலுக்கு ஒரு உண்மையான சான்றாக இது இருந்தது" என அவர் கூறினார்.