ஒரு பொண்ணு 3 மாப்பிள்ளை: அம்பலமான புரோக்கரின் ஏமாற்றுவேலை
கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஒரே பெண்ணை 3 மாப்பிள்ளைகளுக்கு காண்பித்து ஏமாற்றிய புரோக்கரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துரையடுத்த தாண்டவராயபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். இதனையறிந்த புரோக்கர் கண்ணன் என்பவன் கேரளாவில் தமக்கு தெரிந்த ரம்யா என்ற பெண் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்துவைப்பதாகவும் கூறி, ஒரு பெண்ணின் போட்டோவை சக்திவேலிடம் காண்பித்துள்ளான்.
போட்டோவை பார்த்ததும் அந்த பெண்ணை பிடித்துபோன சக்திவேல், அவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைக்கும்படி புரோக்கரிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அந்த பெண்ணுடன் சக்திவேலுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சக்திவேல் அந்த பெண்ணுக்கு ஒரு பவுன் மோதிரத்தை கொடுத்துள்ளார் மேலும் புரோக்கர் கமிஷனாக 25 ஆயிரத்தை கண்ணனுக்கு கொடுத்துள்ளார். பின்னர் கண்ணன் சக்திவேலிடம் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சேலத்தை சேர்ந்த மேலும் இரண்டு வாலிபர்களிடம் இதே பெண்ணை காண்பித்து, அவர்களிடம் தலா 25 ஆயிரம் புரோக்கர் கமிஷனை பெற்றுள்ளான் கண்ணன். ஒரு கட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 3 வாலிபர்களும் கண்ணனை வெறிகொண்டு தேடினர்.
அப்போது கண்ணன் அதே பெண்ணுடன் வேறு வாலிபரை ஏமாற்றுவதற்காக காரில் வந்தபோது அவனை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கண்ணனையும் அந்த பெண்ணையும் கைது செய்தனர். அவனிடம் இதுவரை எத்தனை வாலிபர்களை ஏமாற்றியுள்ளான் என்பது குறித்து விசாரணை நடைபெற்று இருக்கிறது.
பெண் தேடும் வாலிபர்கள் இந்த மாதிரியான பிராடு புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படியான ஆட்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கும்படியும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.