புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாயுத்தொல்லை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.
 
நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.
 
அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.
 
உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.