1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மலச்சிக்கலை நீக்கும் குப்பைமேனி

மலச்சிக்கலை நீக்கும் குப்பைமேனி
குப்பைமேனி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.


 


குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும். செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.
 
1. மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
 
2. குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும்.
 
3. குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
 
4. குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.
 
5. குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
 
6. குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
 
7. குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.
 
8. குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்.
 
9. குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும். மேலும் குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
 
10. குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வை போக்கி, உடல் நலம் பெறும்.