அசிங்கமாக பேசிய நடிகை ஊர்வசி மீது குவியும் புகார்கள் - நடவடிக்கை பாயுமா?
நடிகை ஊர்வசி மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஜீவிதம் சாட்சி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஒரு குடும்பத்தினரை மிகவும் அசிங்கமாக தரக்குறைவாக பேசியதாக ஊர்வசி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அம்மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் சென்றது. அந்த புகார் மனுவில், அந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஊர்வசி குடித்து விட்டு வந்ததாகவும், குடும்ப பிரச்சனை தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது அந்த ஆண் நபரிடம் நாகரீகமற்ற முறையில் பேசியதாகவும், இது இந்திய நீதித்துறை அமைப்பையே அவமதிப்பது போல உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த தொலைக்காட்சி சேனலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கேரளாவில் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர், கேரள மனித உரிமை ஆணையத்திடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தனது குடும்பத்தை இழிவுபடுத்தி விட்டதாகவும், தனது வாழ்க்கையை விளம்பரப்படுத்தி, தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டதாகவும், இதற்கு காரணமான, அந்த தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நிகழ்ச்சியை நடத்திய ஊர்வசி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, கடந்த 2 நாட்களில் நடிகை ஊர்வசி மீது கூறப்பட்ட 2வது புகார் ஆகும். இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.