வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : சனி, 17 மே 2014 (15:48 IST)

என்னுடைய ஒவ்வொரு அணுவும் மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கும் - நரேந்திர மோடி

நாடெங்கும் ஒன்பது கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று தனிபெரும்பான்மை பெற்ற பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தான் நாட்டை வளர்ச்சி நோக்கி வழிநடத்த நாட்டு மக்களின் ஆசிகள் வேண்டுமென கேட்டுக்கொண்டார். 
நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாட்டின் 14 வது பிரதமர் ஆக உள்ளார். 
 
மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த சந்திப்பு முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜ்நாத் சிங் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை தந்த பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 
அப்போது நரேந்திர மோடி பேசுகையில், பாரதீய ஜனதாவை வெற்றி பெற செய்த நாட்டு மக்களுக்கும், வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடக நண்பர்களுக்கும்  நன்றி என்று கூறினார்.
 
நேற்று பிரம்மாண்ட வெற்றிக்கு பின் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த வதோதரா மக்களை சந்தித்த மோடி, நான் வதோதராவில் 50 நிமிடங்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரம்   மேற்கொண்டேன். ஆனால் நீங்கள் என்னை 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளீர்கள்.
 
இத்தகைய வெற்றியை அளித்த உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அரசு என்பது ஒரு கட்சியுடையதோ ஒரு பகுதியுடையதோ கிடையாது.அது மக்களுக்கானது.
 
என்னுடைய உடலில் இருக்கும்  ஒவ்வொரு அணுவும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்கும். நாட்டை வளர்ச்சி நோக்கி வழிநடத்த நாட்டு மக்களின் ஆசிகளும், பிற கட்சிகளின் ஒத்துழைப்பும்  வேண்டுமென பேசினார்.