வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (16:54 IST)

ஆந்திராவின் தலைநகர் இதுதான்..! மாற்றமே இல்லை..! அடித்து சொல்லும் சந்திரபாபு நாயுடு..!!

Amaravathi
ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாளை நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதி தான் இருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம் என்றும் பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை என்றும் அவர் கூறினார். 
 
மூன்று தலைநகர், நான்கு தலைநகர் என வஞ்சக செயல்களால் மக்களோடு விளையாட மாட்டோம் என்ற அவர், அமராவதி தான் ஆந்திராவின் தலைநகர் என்று கூறினார். ஆந்திர மாநிலத்தின் வர்த்தக தலைநகராக விசாகப்பட்டினம்  இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
 
2019ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவுக்கு 3 தலைநகர் என அறிவித்தார். விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என அறிவித்தார். மார்ச் 2022ல் அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்க அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தொடர்ந்து ஜெகன் அரசு அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தான், தற்போது அமையவுள்ள புதிய அரசு அமராவதியை தலைநகராக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.