1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 3 ஜூன் 2015 (20:00 IST)

ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எதிர்த்து சுப்பிரமணிய சாமி மனு

அசாம் நீதிமன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்டிற்கு உத்தரவிட்டது. அதனை எதிர்த்து சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாமில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுப்பிரமணிய சாமி, ”மசூதிகள் மத வழிபாட்டு தலங்கள் அல்ல. அதை எப்போது வேண்டுமானாலும் கட்டலாம். எப்போது வேண்டுமானாலும் இடிக்கலாம் என்று கூறியிருந்தார்.
 

 
அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக அஸ்ஸாமில் உள்ள கிரிஷக் முக்தி சங்ராம் சமிதி என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அசாமில் தேர்தல் வர உள்ள நிலையில் வகுப்பு மோதல்களை தூண்டும் வகையில் சுப்ரமணியசாமியின் பேச்சு அமைந்துள்ளது.
 
எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து அந்த அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அஸ்ஸாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சுப்பிரமணியசாமி தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன.
 
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கடந்த 19ஆம் தேதி சுப்பிரமணிய சாமிக்கு சம்மன் அனுப்பபட்டது. ஆனால் இதற்கு சுப்பிரமணியசாமி தரப்பில் இருந்தும் எந்த பதிலும் அளிக்கப்படவிலை. இதையடுத்து நீதிமன்றம் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடி வாரண்டை பிறப்பித்தது.
 
இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக தடைவிதிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.பந்த், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்சிற்கு சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.