செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (12:59 IST)

மாஸ்க் போடலையா? இவன கொரோனா வார்டுல போடுங்க! – மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்திய பிரதேசத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு அரசு அளிக்கும் நூதன தண்டனையால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களை மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. பல மாநிலங்களில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றினால் அபராதம் உள்ளிட்டவையும் விதிக்கப்படுகின்றன. ஆனாலும் மக்கள் பலர் தொடர்ந்து மாஸ்க் அணியாமல் இருப்பது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்தியபிரதேசம் குவாலியர் மாவட்ட நிர்வாகம் மாஸ்க் அணியாதவர்களுக்கு நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது. பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மருத்துவமனைகளின் கொரோனா வார்டுகள் மற்றும் காவலர்களின் ஊரடங்கு காவல் பணிகள் உள்ளிட்டவற்றில் மூன்று நாட்கள் தன்னார்வலர்களாக பணிபுரிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாஸ்க் அணியாவிட்டால் மூன்று நாட்கள் தன்னார்வலர்களாக பணிபுரிய வேண்டியதிருக்கும் என்ற உத்தரவு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மக்கள் முறையாக மாஸ்க் அணிவதை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.