நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!
விமானத்தில் பயணம் செய்த சர்க்கரை நோயாளி ஒருவருக்கு திடீரென சர்க்கரை அளவு குறைந்ததால் உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவர் அவரது உயிரை காப்பாற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் இருந்து டெல்லி நோக்கி நேற்று காலை 5:45 மணி அளவில் ஒரு விமானம் புறப்பட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதே விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் அவரை பரிசோதனை செய்த நிலையில், அவருக்கு சர்க்கரை அளவு குறைந்திருக்கும் என்று கணித்தார்.
மேலும், அவருக்கு தலைவலி மற்றும் இடது பக்கத்தில் பலவீனமாக இருப்பதாகவும் கூறியதோடு, "நான் ஒரு சர்க்கரை நோயாளி" என்றும், "சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பதாகவும்" கூறினார்.இதன் அடிப்படையில், அவரின் சர்க்கரை அளவு குறைந்திருப்பதாக முடிவு செய்த மருத்துவர் உடனடியாக விமான நிலைய ஊழியர்களிடம் சர்க்கரை கலந்த தண்ணீரை கொண்டு வருமாறு கேட்டார். அந்த தண்ணீரை குடித்தவுடன் 15 நிமிடங்களில் அந்த நபர் இயல்பு நிலைக்கு வந்ததாக தெரிகிறது.
மேலும், விமான பயணியின் உயிரை காப்பாற்றியவர் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் சண்டிகர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதன்மை நிறுவனத்தின் பேராசிரியர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.