வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (08:56 IST)

கொரோனா போனாலும் விடாத கொரோனா காலர்ட்யூன்! – ரத்து செய்ய பரிந்துரை!

செல்போன் அழைப்புகளின்போது இடம்பெறும் கொரோனா விழிப்புணர்வு காலர்ட்யூன்களை ரத்து செய்ய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வரும் நிலையில் தற்போது பாதிப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ல் அதிகரித்தபோது செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் கொரோனா பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை காலர்ட்யூனாக அமைத்தன.

இந்த கொரோனா வாசகங்கள் முடிந்த பிறகே கால் செய்பவருக்கு ரிங் போகும் என்ற நிலை இருக்கும் நிலையில் அவசரமாக யாருக்காவது அழைத்தால் கூட கொரோனா காலர்ட்யூன் முடியும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில் தடுப்பூசி போட வலியுறுத்தும் அந்த காலர்ட்யூன் அவசியமா என கேள்வி எழுந்துள்ளது.

செல்போன் அழைப்புகளின்போது ஒலிக்கிற கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பையும், காலர் டியூன்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் மொபைல் போன் பயனாளர்களிடம் இருந்து மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இதனால் செல்போன் அழைப்புக்கு முந்தைய கொரோனா காலர்ட்யூன்களை ரத்து செய்யுமாறு மத்திய சுகாதாரதுறைக்கு தொலைதொடர்பு துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.