ஏர் இந்தியா சொத்துகள் விற்பனை – கடன்சுமையைக் குறைக்க மத்திய அரசு முடிவு
கடன்சுமையில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன்களைக் குறைக்க மத்திய அரசு ஒரு புது முடிவை எடுத்துள்ளது.
இந்திய அரசின் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா மீளாதக் கடன்சுமையில் சிக்கியுள்ளது. அதை முன்னிட்டு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை விற்றுக் கடன்களை அடைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியாவுக்கு உள்ள கடனில் ரூ. 55 ஆயிரம் கோடியைக் குறைக்க முடியும் என அரசு கூறிவருகிறது.
முதலில் கடன் சுமையைக் குறைக்க ஏர் இந்தியாவில் மத்திய அரசுக்கிருக்கும் பங்குகளில் 76 சதவீதத்தை தனியாருக்கு விற்க அரசு முன் வந்தது. அத்துடன் நிர்வாக பொறுப்பையும் தனியாரிடமே கொடுக்க முடிவு செயுதுள்ளதாகவும் தெரிவித்தது.. ஆனால் எந்தவொரு நிறுவனமும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க முன்வரவில்லை.
இதற்கு மக்களிடம் இருந்தும் ஏர் இந்தியா ஊழியர்களிடம் கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து ஏர் இந்தியாவை விற்கும் முடிவுகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனாலெயே சொத்துக்களை விற்கும் முடிவுகளை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சொத்துகளை விற்கும் முடிவை அடுத்து மும்பையில் உள்ள ஏர்லைன்ஸ் ஹவுஸ், டெல்லி வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்த மான இடம் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பாபா கராக் சிங் மார்க் பகுதியில் உள்ள நிலம் ஆகியவற்றை விற்க முடிவு செய்துள்ளது.