அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் பெயர் மாற்றம்; அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!
அந்தமான் தலைநகரம் போர்ட் பிளேயர் பெயர் மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் நகரங்களின் பெயர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பம்பாய் மும்பையாக மாறியது என்பதும் கல்கத்தா கொல்கத்தாவாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர், ஸ்ரீ விஜயபுரம் என மாற்றப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மதிக்கும் வகையில் அரசாங்கத்தின் இந்த பெயர் மாற்றம் முடிவு இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார். காலனி முத்திரையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக போர்ட் பிளேயர் என்ற பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மறுபெயரிட முடிவு செய்துள்ளோம் என்றும் முந்தைய பெயருக்கு ஒரு காலனித்துவம் மரபு இருந்ததால் ஸ்ரீ விஜயபுரம் என்ற சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியை குறிக்கும் வகையில் தனித்துவமான பெயராக மாற்றப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீர சாவர்க்கார் உள்ளிட்ட சுதந்தர போராளிகள் அந்தமான் சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran