கிட்னி விற்பனைக்கு - போஸ்டர் அடித்து ஒட்டிய விவசாயி!
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வங்கிகள் கடன் தர மறுத்ததால் தனது சிறுநீரகத்தை விற்கப் போவதாக போஸ்டர் அடித்து ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் பிரதான் மந்திரி கோசல் விகாஸ் யோஜனா மையத்தில் பால்பண்ணை படிப்பை முடித்திருக்கிறார். சொந்தமாக தொழில் தொடங்க எண்ணிய ராம்குமார் தனது சான்றிதழ்களை கொண்டு வங்கியில் கடன் வாங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வங்கியும் கடன் கொடுக்க முன் வரவில்லை. சில வங்கிகள் கடன் கொடுப்பதாக கூறி இழுத்தடித்து இருக்கின்றன.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் தனது சிறுநீரகத்தை விற்பதாகவும் அதை பெற்றுக் கொண்டு யாராவது பணம் தர வேண்டும் என்றும் போஸ்டர் அடித்து பல பகுதிகளில் ஒட்டியிருக்கிறார். சட்டப்படி சிறுநீரகத்தை விலைக்கு விற்பது குற்றமாகும். எனினும் ராம்குமாரின் மன உளைச்சலை கருத்தில் கொண்டு எதனால் அவருக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தன என்பது குறித்து விசாரிப்பதாக சஹாரான்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.