ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : புதன், 10 செப்டம்பர் 2014 (15:34 IST)

காதலைத் தவிர வேறொன்றுமில்லை - திரை விமர்சனம்

காதலை வெறுக்கும் ஒருவரும் இறந்த காதலனையே நினைத்து வாழும் ஒருவரும் காதலிப்பதே இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், மிகவும் சொதப்பலாகப் படமாக்கியதன் மூலம், பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளார் இயக்குநர் செல்வபாரதி.

 
கதாநாயகன் யுவனுக்குக் காதல் என்றாலே பிடிக்காது. பொது இடங்களில் ஜோடியாக இருப்பவர்களைப் பார்த்தால், உடனே புகைப்படம் எடுத்து, அவர் பணியாற்றும் தொலைக்காட்சியில் அவற்றை வெளியிடுகிறார். இதனால் காதலர்கள், கள்ளக் காதலர்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும் ஆளாகிறார். யுவன் ஏன் இப்படிச் செய்கிறார்? அதற்கு ஒரு பின்கதை. 
 
யுவனின் அப்பா செல்வபாரதி, ஒழுக்கத்தைப் பேணிக் காக்கும் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர். யுவனுக்கு நான்கு அக்காமார்கள். மூத்த அக்கா, 12ஆம் வகுப்பில் படிக்கிறாள். அதே பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வருபவர் இவளைக் காதலிக்க, இருவரும் ஊரை விட்டு ஓடுகிறார்கள். இது தெரிந்தால் அவமானம் என்று அஞ்சிய யுவனின் அப்பா, அம்மா, அக்காமார்கள் என அத்தனை பேரும் குளத்தில் மூழ்கி இறக்கிறார்கள். அப்போது யுவன் குழந்தை என்பதால் அவர் மட்டும் எஞ்சுகிறார். ஓடிப் போனவர்களை என்றைக்காவது பார்த்தால், படிக்க வரும் மாணவியைப் பெண்டாட்டியாகப் பார்க்கக் கூடாது என்றும் கற்பிக்கும் ஆசிரியரைப் புருஷனாகப் பார்க்கக் கூடாது என்றும் அப்பா சொல்லும் அறிவுரையை இருவரிடமும் சொல்லுமாறு கூறிவிட்டு அவர் மரிக்கிறார். காதலால் தானே தன் குடும்பம் இப்படி ஆயிற்று என்று, அன்றிலிருந்து காதல் என்றாலே அடியோடு வெறுக்கிறார் யுவன். 
 
செல்வபாரதியின் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராகப் பணியாற்றிய இமான் அண்ணாச்சி, ஒரு டியூஷன் மையம் நடத்துகிறார். யுவன் அங்கே வந்து தங்குகிறார். அந்த டியூஷன் மையத்திற்கு எதிரில் ஒரு குழந்தைகள் பள்ளி (பிளே ஸ்கூல்). அதில் ஆசிரியராகச் சரண்யா மோகன். அவருக்கு ஒரு பின்கதை.
 
சரண்யா மோகனைத் தீவிரமாகக் காதலித்த ஒருவர், சரண்யா வரும் பேருந்திலேயே தொங்கிக்கொண்டு வரும்போது தவறி விழுந்து இறக்கிறார். அதிலிருந்து சரண்யா, அவர் நினைவாகவே இருக்கிறாள். யுவனின் பின்கதையை அறிந்த சரண்யா, காதல் வலியை மட்டும் தருவதில்லை. நல்ல வழியையும் காட்டும் என அறிவு புகட்டுகிறார். இந்நிலையில் யுவனுக்குச் சரண்யா மீது காதல் பிறக்கிறது. சரண்யா அதை ஏற்றாரா என்பதே முடிவு.
 
டியூஷன் மையம் நடத்தும் இமான் அண்ணாச்சி, எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிறார். கணக்கு வாத்தியாரான அவர், ஒரு முறை கூட கணக்குப் பாடம் எடுக்கவில்லை. படிக்க வந்த பிள்ளைகளை அதட்டுவதும் மிரட்டுவதும் அவர்கள் பதிலுக்கு ஏறுக்கு மாறாக, எக்கச்சக்கமாகப் பேசுவதும் மிகவும் திகட்டுகிறது. செல்லும் கையுமாக அவர்கள் சுற்றுவதும் ஒருவரை ஒருவர் லுக் விடுவதும் அரட்டை அடிப்பதும்... அப்பப்பா, உருப்படியான மாணவர் ஒருவர் கூடவா இல்லை? அதுவும் இந்தப் படத்தில் கல்வியைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் ஏகப்பட்ட போதனைகள் வேறு.
 
ஜோடியாக யார் இருந்தாலும் அவர்கள் காதலர்கள் / கள்ளக் காதலர்கள் என்ற முடிவுக்கு யுவன் வருவது எப்படி? அவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ கூட இருக்கலாமே. காதலர்களாகவே அவர்கள் இருந்தாலும் அவர்களின் பிரைவஸியில் இவர் எப்படி தலையிடலாம்? இவர் தான் இப்படி என்றால், இவர் எடுத்த படங்களைத் தொலைக்காட்சி நிறுவனம் எப்படி ஒளிபரப்பியது? ஒரு காட்சிக்கே இத்தனை கேள்விகள் எழுகின்றன.
 
ஓடிப் போன அக்காவையும் அக்காள் கணவரையும் யுவன் தேடுகிறார். தற்செயலாக அவர் பெயரை வைத்து, அவரைக் கண்டுபிடிக்கிறார். அதுவே அதிசயம் தான். அடுத்து அவர், நீ யார் என்று கேட்க, அவர் சிறு வயதில் கொடுத்த அதே சாக்லேட்டுகளைக் கொத்தாக எடுத்து அவர் மீது வீசுகிறார். 20 ஆண்டுகளாக அவற்றை அவர் சாப்பிடாமலா வைத்திருந்தார்? அது போகட்டும். ஓடிப் போன அக்கா, திருமணம் ஆன அன்றே புத்தி பேதலித்து விடுகிறார். 20 ஆண்டுகள் கழித்து யுவனைப் பார்க்கும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை (அக்கா அதே மாதிரி இருக்கிறார்). ஆனால், இந்தச் சாக்லேட்டைக் காட்டியதும் அக்காவுக்குப் பழைய ஞாபகம் வந்துவிடுகிறது. இப்படி அடுக்கடுக்கான அதிசயங்கள்.
 
இறுதிக் கட்டக் காட்சிகள், இன்னும் படு மொக்கையாக உள்ளன. அண்ணா நகர் டவரைச் சுற்றிச் சுற்றிக் காட்டி வெறுப்பேற்றுகிறார் இயக்குநர். அதிலும் யுவனின் காதலை ஏற்காமல் போகும் சரண்யாவை ஒரு பொடியன் கூப்பிட்டு நிறுத்துகிறான். நீங்க, செத்துப் போன பிறகுதான் காதலிப்பீங்களா என்று கேட்கிறான். படிக்கும்போது காதல் கூடாது என்ற தன் அறிவுரையைத் தன் படத்திலேயே இயக்குநர் கடைப்பிடிக்கவில்லை. படிக்கும் மாணவன், பிளே ஸ்கூல் ஆசிரியைக்குக் காதலிக்குமாறு அறிவுரை சொல்கிறான். அதன் பிறகு ஓடி வரும் சரண்யா, யுவனின் காதலை ஏற்றுக்கொள்ளும் காட்சிகள், ரொம்பவும் செயற்கையாக உள்ளன. நாடகத்தனமாய் இப்படி ஏராளமான காட்சிகள், படம் முழுதும் உள்ளன. 
 
படத்திற்கு இசை, ஸ்ரீகாந்த் தேவா. பழைய திரைப்படப் பாடல்கள் இரண்டை அப்படியே சில நிமிடங்கள் ஓட விட்டுள்ளார். இந்தப் பாடல்கள், காட்சிகளோடு ஒட்டவில்லை. கானா பாலா பாடியிருக்கும் ‘நோக்கியா பொண்ணு.. சாம்சங் பையன்’ பாடலுக்கு சிறுவர்களும் பெரியவர்களும் வாய் மூலம் கொடுக்கும் சப்தம், அளவுக்கு அதிகமாக இருக்கிறது. கல்வியில் ஒழுக்கம் பற்றி ஒரு பக்கம் காட்சிகள் வைத்தாலும் இப்படி மாணவர்கள் காதலிப்பதாகவும் காட்சிகளை வைப்பதன் மூலம் இயக்குநர் என்னதான் சொல்ல வருகிறார் என்ற குழப்பம் தான் வருகிறது.
 
இந்தி ஆசிரியரை மாணவன் ஒருவன், கத்தியால் குத்தியதாக வரும் காட்சி, நன்று. ஆனால், வேறு இரண்டு பேரைக் குத்த நினைத்து, அவர்கள் கிடைக்காததால் இவரைக் குத்தினேன் என்று அவன் சொல்வது, வலுவாக இல்லை. 
 
வேறொன்றுமில்லை, வேறொன்றுமில்லை என்ற கிண்டலைத் திரையரங்கில் கேட்க முடிந்தது.  ஒரு நல்ல திரைப்படத்துக்கு உரிய எந்தத் தரத்துடனும் இ்து இல்லை. மொத்தத்தில் இது ஒரு மொக்கை, போர், அறுவை, சொதப்பல், கால் வேக்காடு, குப்பைப் படம்.