வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By அண்ணாகண்ணன்
Last Updated : திங்கள், 1 செப்டம்பர் 2014 (10:09 IST)

இரும்பு குதிரை - திரை விமர்சனம்

பாலகுமாரனின் புகழ் பெற்ற நாவலான இரும்புக் குதிரைகளுக்கும் இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு காதல், ஒரு பிளாஷ் பேக், ஒரு பைக் ரேஸ்... அவ்வளவுதான் படம். 
 
பைக் ரேஸராக இருந்த அதர்வா, ஒரு சாலை விபத்தில் தந்தையைப் பறிகொடுத்த பிறகு, மிக மெதுவாக பைக் ஓட்டுகிறார். சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறார். அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக, அவர் அம்மா, அவரைப் பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆனால், அங்கும் அவர் மிகவும் மெதுவான வண்டியோட்டி என்றே பெயர் எடுக்கிறார். 
 
சி.ஏ. படித்துக்கொண்டே பகுதி நேரப் பணி புரியும் அதர்வா, பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு வந்து மருத்துவம் படிக்கும் பிரியா ஆனந்தைக் காதலிக்கிறார். வழக்கம் போல் பிரியா ஆனந்த், நான் உன்னை நண்பனாகத்தான் பார்க்கிறேன் என்று சொல்ல, பரிதாபமாக நிற்கிறார் அதர்வா.
 
பிரியா ஆனந்த், பைக் விரும்பி என்பதால், அவர் விருப்பத்துக்காக ஒரு சூப்பர் பைக் வாங்குகிறார். அந்த டுகாட்டி பைக்கிற்குப் பின்னால் இருக்கும் கதை தான், பிற்பாதி.
 
அதர்வாவின் பாத்திரப் படைப்பு, பலவீனமாக இருக்கிறது. பைக் ரேஸருக்கு உரிய உடல்மொழி, அவரிடம் இல்லை. சி.ஏ. படிப்பதாகச் சொல்லப்படும் அவரை ஒரு முறை கூட, அவரது கல்லூரியிலோ, புத்தகங்களுடனோ காட்டவில்லை. பைக் பற்றி அவருக்குப் பெரிய அறிவு இருப்பதாகவும் அதில் ஆர்வம் இருப்பதாகவோ  கூடக் காட்ட இயக்குநர் தவறிவிட்டார். 
 
ஆனால், பிரியா ஆனந்தை, பைக் விரும்பியாகவும் சத்தத்தை வைத்தே என்ன பைக் வருகிறது என்று சொல்கிறவராகவும் காட்டியிருக்கிறார். இந்தத் திறமைகள் அதர்வாவிடம் இருப்பதாக வைத்திருந்தால், அவரது பாத்திரம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
 
பிரியா ஆனந்தின் செல்பேசி எண்ணைக் கண்டுபிடிக்க அவர் போடும் கணிதப் புதிரும் அதை அதர்வா சில விநாடிகளில் தீர்ப்பதும் நன்று. ஆனால், இந்த அளவு புத்திசாலித்தனம் உள்ள ஒருவர், காதலி கடத்தப்பட்டாள் எனத் தெரிந்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என முழிபிதுங்கி நிற்பது, பொருத்தமாக இல்லை.
 
மேலும்

அது போல், பிரியா ஆனந்த் இவ்வளவு பெரிய பைக் ஆர்வலர் என்றால், அவருக்கு பைக் ஓட்டத் தெரியாதா? ராய் லட்சுமி கூட பைக் ஓட்டுவது போல் காட்சி இருக்கிறது. ஆனால், பிரியாவுக்கு இல்லை. மேலும், மருத்துவக் கல்லூரி மாணவியான அவர், யாருக்காவது முதலுதவியாவது செய்து, தனது மருத்துவத் திறனைக் காட்டியிருக்கலாம். ஒவ்வொரு பாத்திரத்தின் பின்புலமும் கதையுடன் இணைந்து செல்ல வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் பிரியா, மருத்துவம் படித்தால் என்ன? கணிப்பொறி படித்தால் என்ன? அல்லது சும்மா ஊர் சுற்றினால்தான் என்ன?

 
ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த ஜானியே இந்தப் படத்திற்கும் வில்லன். அவரது பைக் சாகசங்கள், நேரடிக் காட்சிகளாக இல்லை. வீடியோ  கிளிப்பிங்ஸைக் காட்டி இயக்குநர் சமாளித்திருக்கிறார். டுகாட்டி பைக்கை ஜானி தேடி வந்த காரணமும் சுவாரசியமாக இல்லை.
 
சண்டைக் காட்சிகளில் ஜானிக்கு முன்னால் அதர்வா, சோப்ளாங்கியாக இருக்கிறார். இந்த அழகில் அவர், இந்தப் படத்துக்காக சிக்ஸ் பேக் வேறு வைத்திருக்கிறார். இறுதிக் கட்டக் காட்சிகளில் நடக்கும் பைக் ரேஸில் காடு மலை எல்லாம் தாண்டி முதலில் வந்து சேரும் அதர்வா, எல்லைக் கோட்டினை எட்டியதும் சரியாக நிற்கத் தெரியாதா? அங்கே கீழே விழுந்து, அடிபட்டுக் கிடப்பது, அதர்வாவின் பாத்திரத்தை இன்னும் சிதைக்கிறது. 
 
ஒட்டுமொத்தமாக இந்தப் படத்தில் இயக்குநர் யுவராஜ் போஸ் தோற்றிருக்கிறார். கதை, திரைக் கதை இரண்டிலும் கோட்டை விட்டிருக்கிறார். அதர்வாவும் தயாரிப்பாளரும் சரியான கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. 
 
குருதேவின் ஒளிப்பதிவு தெளிவாக இருந்தாலும் அதில் புதுமை எதுவும் இல்லை. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ஏமாற்றம் அளிக்கிறது. Hello Brother என்னமா Party-கு தான் போலாமா என்ற குத்துப் பாட்டில் மாயா லோகமிது தேயா தேகமிது ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது என வரும் வரிகள் நன்று.
 
படத்தின் தலைப்பில் ஒற்றுப் பிழை இருக்க, உள்ளேயோ வேறு பிழைகள். பந்தயக் குதிரை போல் சென்றிருக்க வேண்டிய ஒரு பைக், திரைக் கதை ஓட்டைகளால் பல இடங்களில் பஞ்சர் ஆகியிருக்கிறது.