வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (09:09 IST)

போனவாரம் ராதாரவி.. இந்த வாரம் ஸ்டாலினா ? – நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு !

நடிகர் ராதாரவியை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலினும் சினிமா நடிகைகள் குறித்து சர்ச்சையானக் கருத்துகளைப் பேசியுள்ளதால் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் பேசிய ராதாரவி நயன்தாராவைப் பற்றி சில சர்ச்சையானக் கருத்துகளைக் கூறினார். இதனால் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் உள்பட பல திரையுலகத்தினர் ராதாரவிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். இந்த விஷயம் திமுக தலைமைக்கும் சென்றது. அதனால் உடனடியாக திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராதாரவி நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ராதாரவியும் தன் பேச்சுக்கு மனவருத்தம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து திமுக தலைமைக்கு நயன்தாரா உள்ளிட்டோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஆனால் ராதாரவி சர்ச்சை முடிந்து சில நாட்களிலேயே அடுத்த சர்ச்சைத் தொடங்கியுள்ளது. அதையும் திமுக தலைவர் ஸ்டாலினே தொடங்கி வைத்துள்ளார்.  மக்களவைத் தேர்தலுக்காகத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஸ்டாலின் ஆண்டிபட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது ‘டெல்லியில் தமிழக விவசாயிகள் சென்று போராட்டம் நடத்தியபோது மோடி அவர்களைப் பார்க்கவில்லை. ஆனால் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் என்றால் உடனடியாக அழைத்துப்பார்க்கிறா. கேவலம் நடிகைகளையும் அழைத்துப் பேசிவருகிறார்’ எனப் பேசினார்.

ஸ்டாலினின் இந்த பேச்சு நடிகைகளை இழிவுபடுத்துவதாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ’ராதாரவி செய்த தவறையே நீங்களும் செய்யலாமா திமுக தலைவர் அவர்களே’ எனவும் கேள்விகள் எழுந்துள்ளன. ராதாரவியின் சகோதரியும் பிரபல நடிகையுமான ராதிகா இது தொடர்பான தனது அதிருப்தியை டிவிட்டரில் பகிர்ந்து அதில் ஸ்டாலினை டேக் செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த சர்ச்சை திமுகவுக்குப் பின்னடைவாக அமையுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.