1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:50 IST)

விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமானதாக கடைப்பிடிப்பது ஏன்...?

Lord Ganesha
விநாயகருக்கு மிக எளிய உணவுகளே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. ஆனால், அந்த எளிய உணவுக்குள் மிகப்பெரிய தத்துவங்கள் புதைந்துள்ளன.


விநாயகருக்கு மிகவும் பிடித்தது மோதகம்; இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இது விநாயகருக்கு படைக்கப்படுகிறது.

அதேபோல் விநாயகருக்கு கரும்பும் பிடிக்கும்; இனித்தாலும் கடிப்பதற்கு கடினமானது கரும்பு. வாழ்க்கையும் இப்படித்தான், கஷ்டப்பட்டு உழைத்தால், இனிமையாக  வாழலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இது படைக்கப்படுகிறது.

அவல், பொரியை இவருக்கு படைப்பர்; ஊதினாலே பறக்கக்கூடியவை இந்தப் பொருட்கள், வாழ்க்கையில் நாம் சந்திக்கிற துன்பங்களை ஊதித்தள்ளி விடவேண்டும் என்பதை குறிக்கிறது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விருப்பமான கடவுள் விநாயகர்.

நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்கிற வழி எல்லாம் ஆறு - ஏரி கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி, முட்டுச்சந்து, சாலை ஓரம் என, அனைத்து இடங்களிலும் அமர்ந்திருக்கும் இவரே, நமக்குத் துணையாக வருபவர். பிள்ளையாருக்கு  பிரமாண்ட கோவில் வேண்டாம்; நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில், மஞ்சள் பொடி, களிமண் என எதில் பிடித்து வைத்தாலும், அதில் ஆவாஹனம் ஆகி, நமக்கு அருள்பாலிப்பார்.

ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அனுக்ரகத்தைக் வேண்டுகிறோம்.  இக்கட்டான சூழ்நிலையில் ஒரு செயலை முடிக்க நினைப்பவர்கள், விநாயகரை வணங்கி அந்த காரியத்தை துவங்கினால், அது நல்லபடியாக முடியும். இந்து மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்றாகும்.