1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:43 IST)

விநாயக சதுர்த்தி பூஜையின் சிறப்புக்களும் பலன்களும் !!

Lord Ganesha
ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல. மோதை, பிரபோதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை சாருகாசை, சுமந்தினை, நந்தினி காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.


ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரி பூரண பலன் தருவார் விநாயகர். மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும். புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும்.

வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார். உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார். வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார். கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும்.

மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங் களிலும் வெற்றி பெறலாம். முத்கல புராணம், சிவ புராணம், கந்த புராணம், கணேச புராணம், மச்ச புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புரணம் ஆகிய புராணங்களும், ரிக் வேதம், சுக்ர நீதி, சுப்பிர பேதம், அபிதான கோசம் முதலான ஞான நூல்களும் விநாயகரைப் போற்றுகின்றன.

விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலைகள்) பிள்ளை யாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை: முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள்ளருகம்புல் துளசி, வன்னி  நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்தி கீரை.

வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி ஆகிய தினங்கள் பிள்ளையாரை வழிபட உகந்த தினங்கள். இந்த தினங்களில் சிரத்தையுடன் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால், நினைத்ததை அடைந்து நீடூழி வாழலாம்.