வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (12:26 IST)

சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் அபிஷேக பொருட்களை வழங்குவதால் என்ன பலன்கள்...?

ஆடி மாதம் பொதுவாகவே இறைவழிபாட்டிற்கு இந்துக்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் பிரதோஷத்தில் சிவபெருமானை வேண்டி வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது தீவிர நம்பிக்கையாக இருந்து வருகிறது.


ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும்  சிறப்பானது. பிரதோஷ பூஜை வேளையான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு, அபிஷேகத்துக்கு பொருட்கள் வழங்குங்கள். முடிந்தால், வில்வம் கிடைத்தால் வழங்குங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தக் கொடுங்கள். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருள்வார் சிவனார்.

ஆடி மாதம் பிரதோஷ விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே சிவ வழிபாடு செய்வது உத்தமம். பிரதோஷ காலத்தில் தான் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்கிற நியதி இல்லை. அபிஷேகம் செய்பவர்கள் கட்டாயம் காலையிலேயே இதனை எல்லாம் முடித்துக் கொள்வது நலம் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு சிவபெருமான் லிங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு பால், பன்னீர், சந்தனம், நெய், விபூதி, வில்வம் போன்ற பொருட்களால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பானது. வீட்டில் சிவ மந்திரங்கள் ஜெபிப்பதும், ஸ்லோகங்கள் வாசிப்பதும் லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும்.

வியாபாரம், தொழில், உத்தியோகம் என்று நீங்கள் வருமானம் ஈட்டக்கூடிய விஷயங்களில் அதிக பலன் பெற இந்த ஆடி மாத பிரதோஷம் மிகவும் நல்ல பலன் தருபவையாக இருக்கும். பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு வருமானத்திற்கு குறைவு இல்லாமல் இருக்கும். நலிந்த தொழில் மீண்டும் வளர்ச்சியை எட்டவும், மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வியாபாரம் எழுச்சியுறவும் இந்த சிவ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்வது பலன் தரும்.