புதன், 26 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2025 (21:10 IST)

ஈஷாவில் ‘யக்‌ஷா’ 2-ஆம் நாள் விழா! இந்துஸ்தானி இசையால் அரங்கை பரவசப்படுத்திய ராகுல் தேஷ்பாண்டே!

Isha Celebration

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்‌ஷா கலைத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று (24/02/2025) நடைபெற்றது. இதில் தேசிய விருதுபெற்ற இசைக்கலைஞர் ராகுல் தேஷ்பாண்டே அவர்கள் வழங்கிய இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் தாயார் லட்சுமி ரவீந்தர் மற்றும் ஈவண்ட் ஆர்ட் நிறுவனத்தை சேர்ந்த சரஸ்வதி கிருஷ்ணகுமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தனர். 

 

ஈஷா மைய வளாகத்தின் சூர்ய குண்ட மண்டபம் முன் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் தேசிய விருது வென்ற பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் ராகுல் தேஷ்பாண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவருடன் நிகில் ரத்னாகர் பதக், ஆஷிஷ் தத் செளபே, பூர்ணிமா திலிப் செக்டே உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்று அசத்தினர். 

 

இந்த இசை நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்களும் ஈஷா தன்னார்வலர்களும் கண்டு ரசித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் யக்‌ஷா திருவிழாவில் நிறைவு நாளான நாளை (பிப் 25)  திருமதி. மீனாட்சி ஸ்ரீனிவாசன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

 

நம் தேசத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரத கலாச்சாரத்தில் தோன்றிய பல விதமான கலைவடிவங்கள் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து மறைந்து போய் வருகின்றன. இந்த கலை வடிவங்களின் தனித்தன்மை, புனிதம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முயற்சியாக ஈஷா ஒவ்வொரு வருடமும் யக்க்ஷா கலைத் திருவிழாவை நடத்துகிறது. கலை, இசை மற்றும் நடனத்திற்கான மூன்று நாள் திருவிழாவாக யக்‌ஷா நடைபெறுகிறது. இதில் தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.