அய்யப்பன் வழிபாட்டில் பேட்டை துள்ளல்.. முக்கிய சடங்கின் முழு விவரங்கள்..!
அய்யப்பன் வழிபாட்டில் பேட்டை துள்ளல் என்பது ஒரு முக்கியமான சடங்காகும். இதுகுறித்து தற்போது விரிவாக பார்ப்போம்
சுவாமி அய்யப்பன், மஹிஷி என்ற அரக்கியை வீழ்த்தி வெற்றி பெற்றதைக் குறிக்கும் நினைவாகவே பேட்டை துள்ளல் எனப்படும் இந்த ஆடல் நிகழ்கிறது. சபரிமலை புனித யாத்திரை காலம் தொடங்குவதின் அறிகுறியாகவும் இச்சடங்கு நடைபெறுகிறது.
பேட்டை துள்ளல் நடனத்தில் ஈடுபடும் அய்யப்ப பக்தர்கள், சுவாமியின் பூங்காவனம் அல்லது காட்டின் வழிப்பகுதியை மிதிக்கக்கூடாது என்பதும் ஐதிகமாகக் கூறப்படுகிறது. அய்யப்பனடியார்கள் பழங்குடியினர்களைப் போல உடல் முழுவதும் வண்ணங்கள் பூசி, கரிய நிற ஆடைகள் அணிந்து, சரக்கோல் (அம்பு) மற்றும் மரக்கட்டைகள் போன்ற ஆயுதங்களை ஏந்தி செல்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் எருமேலியில் தர்ம சாஸ்தா கோவிலுக்கு வந்து அய்யப்பனை வணங்குகிறார்கள். பின்னர், பக்தர்கள் கூடி “சுவாமி திந்தக்கதோம், அய்யப்பா திந்தக்கதோம்” என்று மேளதாள இசையுடன் பாடல்களை பாடி பேட்டை துள்ளலை ஆரம்பிக்கின்றனர்.
எருமேலியில் பெரியம்பலம், சிறியம்பலம் என இரண்டு சாஸ்தா கோவில்கள் உள்ளன. சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக, முதலில் இங்கு செல்வது பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. இந்த கோவில்களில் அய்யப்பன் வில் மற்றும் அம்பு ஏந்தி நிற்கும் சிலைகள் உள்ளன. பகவதி மற்றும் நாகராஜா சன்னதிகளும் இங்குள்ளது.
சிறிய கோவிலில் பேட்டை கட்டும் பக்தர்கள், பின்னர் பெரிய கோவிலில் பேட்டை துள்ளலை நிறைவு செய்கிறார்கள். கோவிலின் சிவபூத கணங்களை வணங்கி, தலப்பாறையில் காணிக்கை செலுத்தி, கொடுங்காடு வழியாக அவர்கள் சபரிமலை நோக்கி பயணத்தை தொடர்கிறார்கள். மகரவிளக்கு பூஜைக்கு மூன்று நாளுக்கு முன், எருமேலியில் நடைபெறும் அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் மிகவும் பிரசித்தி பெற்றது.
Edited by Mahendran