கிரிவலம் வந்த அண்ணாமலையார்: திருவண்ணாமலையில் வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ம் நாள் திருவூடல் விழா நடக்கும் நிலையில், நேற்று இந்த விழா நடந்தது.
அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த பின், அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு ஆசி வழங்கினார். அதன் பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்த பின்னர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வந்தார்.
அதன் பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு சென்ற அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.
மேலும் ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில், இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் வந்தார். அவரை வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபட்டு பிரசாதம் பெற்றனர்.
Edited by Mahendran