வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிப்பதால் கிடைக்கும் பலன்கள் !!

நலங்கு மாவில் கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது.

நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை  பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
நலங்கு மாவை உபயோகிப்பது, பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள், எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
 
இன்றைய தலைமுறையினருக்கு, முக்கிய பிரச்னையாக இருப்பது முகப்பரு. சிலர், பருக்களை கிள்ளி விடுவதால், அந்த இடத்தில் பரு இருந்ததற்கான  அடையாளம் அப்படியே இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது, நலங்கு மாவு. நலங்கு மாவை தொடர்ந்து உபயோகிக்கும் போது, முகப்பருவானது  குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.
 
வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு, நிறைய பேர் செயற்கை வாசனை பொருட்களை உபயோகிக்கின்றனர். கை இடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது, சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கி அதுவே பெரிய தொந்தரவை கொடுத்து விடும். வெயில்  சுட்டெரித்தால், வெளியில் செல்லவே பயப்படுவர்.
 
நலங்குமாவை பயன்படுத்தி, வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதை உபயோகிப்பதால், எவ்வித பக்க விளைகளும் ஏற்படுவதில்லை. பிறந்த குழந்தைகளுக்கு,  நலங்கு மாவை தேய்த்து குளிக்க வைப்பதால், அவர்களின் சருமம் பாதுகாக்கப்படுகிறது.