வியாழன், 26 டிசம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.கேஸ்டன்
Written By கேஸ்டன்
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (11:51 IST)

போயஸ் கார்டனில் சசிகலா இருப்பது சட்ட விரோதம்: தீபா கூறினால் வெளியேறி தான் ஆகனும்!

போயஸ் கார்டனில் சசிகலா இருப்பது சட்ட விரோதம்: தீபா கூறினால் வெளியேறி தான் ஆகனும்!

ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின்னர் அதிகார மையமாக மாறியது. தற்போது அவர் இறந்து விட்ட பின்னரும் அது அதிகாரமிக்க ஒரு இடமாகவே உள்ளது. காரணம் தற்போது ஆளும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தொடர்ந்து அந்த வீட்டிலேயே இருக்கிறார்.


 
 
சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுடன் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்தார். தற்போது அவர் இறந்து விட்ட பின்னரும் அந்த வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் போயஸ் கார்டன் வீடு தன்னுடைய பாட்டியும் ஜெயலலிதாவின் அம்மாவுமாகிய சந்தியா தேவி வாங்கியது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறி வருகிறார். அந்த வீட்டின் வாரிசு நான் தான் எனவும் கூறி வருகிறார் அவர்.
 
சமீபத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய தீபா நான் போயஸ் கார்டனுக்கு செல்வது தொண்டர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என கூறினார். இதனையடுத்து போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவை வெளியேற்ற முடியுமா, தீபாவுக்கு போயஸ் கார்டனில் உரிமை உள்ளதா என பல சந்தேகங்கள் அதிமுக வட்டாரத்தில் எழுந்தன.
 
இதனை விளக்கும் பதிவு தான் இது, போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதாவின் தாய் சந்தியா தேவி ஆர்.சரளா என்பவரிடம் இருந்து வாங்கினார். 1971ம் ஆண்டு சந்தியா தேவி இறந்தார். ஆனால் அவரது மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் கார்டன் வீட்டை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார். பின்னர் அந்த வீடு ஜெயலலிதாவின் சொத்தானது.
 
தற்போது ஜெயலலிதாவும் இறந்துள்ள நிலையில் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகிறது. ஜெயலலிதா தனது சொத்துக்கள் யாருக்கு செல்லும் என உயில் எழுதி வைத்ததாக எந்த தகவலும் இதுவரை இல்லை. அப்படி ஒருவேளை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால் சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ப்ரொபேட் செய்திருக்க வேண்டும்.
 
ப்ரொபேட் செய்யாத உயில் செல்லாது. புரொபேட் செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது என நீதிமன்றத்தை நாட சட்டத்தில் இடமுள்ளது. கடந்த இடைத்தேர்தலின் போது வெளியுலக தொடர்பில்லாமல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் கைரேகை தான் பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்கள் படிவத்தில் பெறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அவர் விரிவான உயில் எழுத வாய்ப்பே இல்லை.
 
ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் உள்ளிட்ட நேரடி வாரிசுகள் யாருமே இல்லை. எனவே அவரது சொத்துக்களுக்கு வாரிசு என இருப்பது அவரது அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா. இவர்களுக்கு தான் ஜெயலலிதாவின் சொத்துக்கள் சேரும். ஜெயலலிதா இருக்கும் வரை அவரோடு போயஸ் கார்டன் வீட்டில் இருந்த சசிகலா அவர் இறந்த பின்னர் தோழி என்ற அடிப்படையில் அங்கு இருக்க சட்ட உரிமை இல்லை.
 
தீபா மற்றும் தீபக்கின் அனுமதி பெற்று வேண்டுமானால் சசிகலா போயஸ் கார்டன் வீட்டில் இருக்கலாம். தற்போது தீபக் சசிகலா ஆதரவாக இருந்தாலும் அவர் ஒருவரின் அனுமதி போதாது, தீபாவின் அனுமதியும் வேண்டும். ஜெயலலிதாவின் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்படவில்லை. பாகப்பிரிவினை செய்தால் தான் போயஸ் கார்டன் வீடு யாருக்கு வரும் என்பது தெரிய வரும். அது முடிவாகும் வரை வேறு யாராவது அந்த வீட்டில் வசிக்க வேண்டுமானால் தீபா, தீபக் இருவரின் அனுமதியும் வேண்டும்.
 
தற்போது உள்ள சூழலில் வீட்டை காலி செய்யுங்கள் என தீபா சசிகலாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட அவருக்கு சட்ட வழிகள் உள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதில் தீபாவுக்கு சாதகாமகவே தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் தீபா தொண்டர்கள் புடை சூழ போயஸ் கார்டன் செல்கிறாரா இல்லை ஜெயலலிதாவின் தோழி சசிகலா தான் போயஸ் கார்டன் இல்லைத்தை அலங்கரிக்க போகிறாரா என்பதை.