உலக கோப்பை கால்பந்து போட்டிப் பார்க்க பிரெசில் பறக்கும் அபிஷேக் பச்சன்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிரெசிலில் நடந்து வருகின்றன. இன்று காலிறுதி ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. அவற்றைப் பார்க்கவும், இறுதி ஆட்டத்தை ரசிக்கவும் நடிகர் அபிஷேக் பச்சன் பிரெசில் செல்கிறார்.
பாலிவுட்டில் பல நடிகர்கள் கால்பந்து ரசிகர்கள். முக்கியமாக அமிதாப் பச்சன். அமெரிக்கா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தியபோது இறுதி ஆட்டத்தில் பிரெசிலும், இத்தாலியும் மோதின. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இந்த இறுதிப் போட்டியை காண கடைசி கட்டத்தில் அமெரிக்கா சென்றார் அமிதாப்.
ஹோட்டல் ரிசர்வேஷன் செய்யவில்லை, போட்டியை காண டிக்கெட் எடுக்கவில்லை. பிறகு பல மடங்கு அதிக தொகை கொடுத்து போட்டியை காண ஒரு டிக்கெட்டை வாங்கி இறுதிப் போட்டியை கண்டு ரசித்தார். அந்தப் போட்டியில் அமிதாப்பின் விருப்ப அணியான பிரெசில் வென்றது.
அபிஷேக் பச்சனுக்கும் விருப்ப அணி பிரெசில்தான். பிரெசில் காலிறுதிக்கு தகுதிபெற்ற உற்சாகத்தில் பிரெசில் செல்வதென முடிவு செய்துள்ளார்.
ம்ஹும்... நமக்கு டிவி தான் என்கிறீர்களா? பல் இருக்கிறவர்கள் பகோடா சாப்பிடுகிறார்கள்.