கொரோனா ஆபத்து; 10 கோடி பேர் தீவிர வறுமைக்கு செல்லும் அபாயம்! – ஐநா எச்சரிக்கை!
இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலகளவில் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு கொரோனாவால் உருவாகியுள்ளதாக ஐநா பொதுசெயலாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 8 மாத காலமாக உலகம் முழுவதையும் முடக்கியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 6 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து வருகின்றனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறித்து பேசியுள்ள ஐநா சபை பொதுசெயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் “கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸிடம் உலகம் மண்டியிட்டுள்ளது. இந்த தொற்று நோய் நமது பலவீனத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்த தொற்று நோயால் முறைசாரா அமைப்பு தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என பலரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். வல்லரசு நாடுகளை விடவும், வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் தீவிரமான வறுமைக்கு செல்லும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.