டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!
அமெரிக்க டாலரில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும், டாலரை விட்டு வெளியேறினால் அமெரிக்காவிடமிருந்து 100% வரி கட்டணத்தை எதிர்கொள்வார்கள் என்றும் இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"டாலரில் வர்த்தகம் செய்வதிலிருந்து பிரிக்ஸ் நாடுகள் வெளியேற முயற்சிக்கும் எண்ணத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது," என்று ட்ரம்ப் கூறியுள்ளார். புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதோ அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு நாணயத்தை உருவாக்குவதோ நடக்காது என்று இந்த நாடுகள் பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் தர வேண்டும். இல்லையேல், அமெரிக்காவிடமிருந்து இவர்கள் 100% வரி கட்டணத்தை எதிர்கொள்வார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் அற்புதமான பொருளாதரத்துடன் செய்யப்படும் வர்த்தகத்திலிருந்து அவர்கள் விடை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரும் என்றும், அமெரிக்காவை தவிர்த்து வேறொரு நாடு தேடிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் இல்லாமல் வேறு நாணயத்தில் வர்த்தகம் செய்து கொள்ள முடியாது என்றும், அப்படி எந்த நாடாவது முயற்சித்தால் அவர்கள் அமெரிக்காவிடமிருந்து விடை பெறலாம் என்றும் டிரம்ப் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவுதி அரேபியா உட்பட பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் கொண்டுள்ள நாடுகள் இனி என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva