கான்சாஸ் துப்பாக்கி சூடு. இந்தியரை காப்பாற்ற முயன்ற அமெரிக்கருக்கு சுஷ்மா ஸ்வராஜ் பாராட்டு
அமெரிக்காவில் உள்ள கான்ஸாஸ் நகரில் கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு உணவு விடுதி ஒன்றில் 2 இந்தியர்களை ’நாட்டை விட்டு வெளியேறு' என்று இனவெறியுடன் கூறியபடியே அந்நாட்டு கடற்படையை சேர்ந்த ஆடம் புரின்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்ற பொறியாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் அலோக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஆடம் புரின்டன் உணவு விடுதிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட
முயன்றபோது அவரை தடுக்க முயற்சித்தவர் ஒரு அமெரிக்கர். கிரில்லாட் என்ற அவர் தடுத்ததால் தான் ஸ்ரீனிவாஸ் ஒருவர் மட்டுமே பலியானார். இல்லையெனில் பலி எண்ணிக்கை அதிகமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை அறிந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கிரில்லாட்டுக்கு நன்றி தெரிவிக்குமாறு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில், அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயரதிகாரி அனுபம் ராய், கிரில்லட்டை அவருடைய வீட்டில் சந்தித்து நன்றி கூறியதோடு காயம் அடைந்திருந்த அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் சுஷ்மா எழுதிய பாராட்டு கடிதத்தையும் அவரிடம் ஒப்படைத்த அனுபம் ராய் குணமான பின்னர்
கிரில்லட்டையும், அவரது குடும்பத்தினரையும் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.