ஜெர்மனியின் முன்னாள் ஆண் செவிலி ஒருவர், தான் 100 நோயாளிகளை கொன்றுள்ளதாக தன் மீதான விசாரணையின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால், இவர் உலகின் மிகப்பெரிய தொடர் கொலைகாரர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
ஜெர்மனியின் வடக்கு பகுதியிலுள்ள 2 மருத்துவமனைகளில், 41 வயதான நீல்ஸ் ஹெகெல், தான் கவனித்து வந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் மருந்துகளை வழங்கியுள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
மரணத்தை விளைவிக்கும் வகையில் அவர் மருந்து வழங்கிய நோயாளிகளை மீண்டும் இயங்க செய்து தனது சகாக்களை கவர்வதே அவரது நோக்கம் என்று அரசு தரப்பு வழங்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
தான் கவனித்து வந்த நோயாளிகள் 6 பேர் இறந்ததற்காக ஏற்கெனவே ஆயுள் தண்டனையை ஹெகெல் அனுபவித்து வருகிறார்.
1999 முதல் 2005ம் ஆண்டு வரை ஓல்டன்பர்க்கில் 34 நோயாளிகளையும், அதற்கு அருகிலுள்ள டெல்மன்ஹோஸ்டில் 64 பேரையும் இவர் கொன்றுள்ளதாக இப்போது கூறப்படுகிறது.
அவருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையா என ஓல்டன்பர்க் நீதிமன்ற நீதிபதி கேட்டபோது, ஏறக்குறைய அனைத்தும் உண்மை என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி தொடங்கப்பட்ட தற்போதைய இந்த விசாரணை, அடுத்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என்று தெரிகிறது.
தோண்டி எடுக்கப்பட்ட 130 உடல் எச்சங்கள் மீது பல ஆண்டுகள் நடத்தப்பட்ட நச்சுயியல் பரிசோதனைகளை தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த எண்ணிக்கைக்கு அதிகமானோரை இந்த மனிதர் கொன்றிருக்கலாம் என்று கூறும் புலனாய்வாளர்கள், அவ்வாறு பாதிக்கப்பட்டோர் எரியூட்டப்பட்டுள்ளனர் என்கின்றனர்.
அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக இந்த முன்னாள் செவிலி நோயாளிகளை கொன்றுள்ள மோசடி இதுவென பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் மர்பாச் கூறியுள்ளார்.
இந்த விசாரணைக்காக 4 ஆண்டுகள் போராடினோம். இன்னும் 100 கொலைகளுக்கு ஹெகெல் தண்டனை அளிக்கப்படுவதை எதிர்பார்க்கிறேன் என்று இவரால் தாத்தாவை இழந்த மர்பாச் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு கொலைக்கும் குற்றம் உறுதி செய்யப்பட்டு, இறந்தோரின் உறவினர்கள் முடிவில் நீதி கிடைத்திருப்பதாக உணரலாம் என்று பாதிக்கப்பட்டோரின் ஆதரவு குழுவை நடத்தி வரும் பெட்ரா கெலின் கூறியுள்ளார்.
மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்தை டெல்மன்ஹோஸ்டில் நோயாளி ஒருவர் மீது செலுத்தியதையடுத்து 2005ம் ஆண்டு பிடிப்பட்டார்.
கொலை முயற்சி குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இந்த ஆண் செவிலி, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் அமைதி காண்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.
இருப்பினும், விசாரணையின்போது 30 பேர் வரை கொன்றுள்ளதாக மனநல மருத்துவர் ஒருவரிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.