1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (14:08 IST)

உக்ரைன் அதிபரை கொல்ல திட்டம்? ரஷிய கூலிப்படையினர் தலைநகரில் முகாம்??

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷிய கூலிப்படையினர் முகாமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உலக போர் எழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று உக்ரைன் - ரஷ்யா இடையிலான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. இதனைத்டொடர்ந்து தற்போது போலாந்து - பெலாரஸ் எல்லையில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஜெலன்ஸ்கி பதவி விலக வேண்டும் என ரஷிய தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதற்கட்ட பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றே தெரிகிறது.
 
இதனிடையே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல தலைநகர் கீவ்வில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 5 வாரங்களுக்கு முன்பே அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கீவ் நகருக்குள் நுழைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நெருங்கிய கூட்டாளிகளால் இயக்கப்படும் போராளிகள் குழுவினர் பெயர் வாக்னர். ஆப்ரிக்காவில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து அவர்கள் மூலம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான திட்டங்களை வாக்னர் குழு தீட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.