’அமெரிக்காவின் செல்ல நாய்தான் தென்கொரியா?’ – கிம் ஜாங் அன் சகோதரி விமர்சனம்!
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி தென்கொரியாவை அமெரிக்காவின் வளர்ப்பு நாய் என விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறாக சமீபத்தில் மேற்கொண்ட ஏவுகணை சோதனையின்போது தென்கொரிய எல்லைக்குட்பட்ட கடல்பகுதியில் ஏவுகணை விழுந்தது. அதற்கு பதிலடியாக வடகொரிய எல்லைக்குள் தென்கொரியாவும் ஏவுகணை வீசியது.
இந்நிலையில் வடகொரியாவின் செயல்பாடுகளை கண்டித்து அதன்மீது பொருளாதார தடைகளை விதிப்பதாக தென் கொரியா அறிவித்துள்ளது. அதற்கு கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் “அமெரிக்கா கொடுக்கும் எலும்பை கடித்துக் கொண்டு ஓடும் வளர்ப்பு நாய் தென்கொரியா எங்கள் மீது என்ன பொருளாதார தடைகளை விதிக்கப்போகிறது என ஆச்சர்யமாக உள்ளது.
எங்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் பொருளாதார தடைகள் தென்கொரியா மீதான கோபத்துக்கும் விரோதத்துக்கும் எண்ணேய் ஊற்றும் வகையில் அமையும் என அந்த முட்டாள்களை எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K