1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (08:48 IST)

கொரோனா இல்லாத நாடானது நியூஸிலாந்து! – உற்சாகத்தில் டான்ஸ் ஆடிய பிரதமர்!

உலக நாடுகளை கொரோனா பாதிப்பு ஆட்டி படைத்து வரும் நிலையில் நியூஸிலாந்து கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளை கடந்த டிசம்பரில் பாதிக்க தொடங்கிய கொரோனாவின் அறிகுறிகள் நியூஸிலாந்தில் பிப்ரவரி மாத இறுதியில் தென்பட தொடங்கின. உஷாரான நியூஸிலாந்து மார்ச் மாதத்தில் ஊரடங்கை அறிவித்தது. ஐந்து கட்டமாக தொடர்ந்த இந்த ஊரடங்கு ஜூன் 22 வரை தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் பொதுமுடக்கம் தீவிரமாக அமலில் இருந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் குறைய தொடங்கின.

கடந்த 17 நாட்களாக அங்கு புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் குணமாகி வீடு திரும்பிய நிலையில் கடைசி நபரும் 48 மணி நேரமாக கொரோனா அறிகுறி தென்படாததால் நேற்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதனால் தற்போது ஒரு பாதிப்பு கூட இல்லாத நாடாக நியூஸிலாந்து மாறியுள்ளது. இன்று முதல் மக்கள் தங்கள் அன்றாட சுதந்திரமான வாழ்க்கையை வாழலாம். திருமண சடங்குகள், திருவிழாக்கள் போன்றவற்றை நடத்தலாம் என அந்நாட்டு பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சியுடன் செய்தி பகிர்ந்துள்ள ஜெசிந்தா, தனது நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதாக தெரிவித்துள்ளார். எனினும் நியூஸிலாந்துடனான பிற நாட்டு எல்லைகள் மூடப்பட்டே உள்ளன. விமானம் மூலமாக வருபவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.