வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (05:46 IST)

இலங்கையில் புதிய கட்சி. விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர் தொடங்கினார்

இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்பட முக்கிய தலைவர்கள் மாண்டனர். இதனால் விடுதலைபுலிகள் இயக்கமே கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் இந்த போரில் தப்பியவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.




இந்நிலையில் தற்போது இலங்கையில் "மறுசீரமைக்கப்பட்ட ஐக்கிய விடுதலைப் புலிகள் முன்னணி' என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்சியை விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்குப் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக இருந்த கந்தசாமி என்பவர் தொடங்கியுள்ளார்.

தனது புதிய அரசியல் கட்சி குறித்து நேற்று கந்தசாமி செய்தியாளர்களிஅம் கூறியபோது, 'இலங்கையிலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளால் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இங்கு, தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அந்தக் கட்சிகள் தவறிவிட்டன. இவற்றுக்கு மாற்றாக, "மறுசீரமைக்கப்பட்ட ஐக்கிய விடுதலைப் புலிகள் முன்னணி' என்னும் புதிய கட்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் தேர்தல்களில் நாங்கள் மாற்று சக்தியாகப் போட்டியிடுவோம். விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்குப் பிராந்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினராக நான் பணியாற்றியுள்ளேன். இந்த அமைப்பில் பல்வேறு நிலைகளில் பொறுப்பாற்றிய முன்னாள் உறுப்பினர்கள் பலர் எங்களுடைய கட்சியில் இணைந்துள்ளனர்' என்று கூறினார்.

இந்த புதிய கட்சிக்கு எந்த அளவுக்கு தமிழ் மக்களிடையே செல்வாக்கு இருக்கின்றது என்பது போகப்போகத்தான் தெரியும்