1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (09:31 IST)

சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிலம் பரிசு! – ஈரான் அறிவிப்பு!

salman rushdie
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தி காயப்படுத்திய நபருக்கு நிலத்தை பரிசாக அளித்துள்ளது ஈரான்.

இந்தியாவின் மும்பையில் பிறந்து பிரபலமான ஆங்கில எழுத்தாளராக இருப்பவர் சல்மான் ருஷ்டி. முன்னதாக சல்மான் ருஷ்டி எழுதி வெளியான ”சாத்தானின் வேதங்கள்” என்ற புத்தகம் இஸ்லாமிய மதத்தை கடுமையாக விமர்சித்திருந்ததால் இஸ்லாமிய மக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. உலகம் முழுவதும் பல இஸ்லாமிய நாடுகளில் அந்த புத்தகம் தடை செய்யப்பட்டது.

1989ம் ஆண்டில் ஈரானின் மதத்தலைவரான அல் கொமேனி என்பவர் சல்மான் ருஷ்டியை கொல்ல பத்வா அறிவித்தார். சல்மான் ருஷ்டியை கொல்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அல் கொமேனி இறந்த பிறகு அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.


இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இஸ்லாமிய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றார்.

இந்த கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய சல்மான் ருஷ்டி தனது ஒரு கண் பார்வையை இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ருஷ்டியை தாக்கிய ஹாதி மாதர் என்ற இளைஞரை அமெரிக்க போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனினும் முன்னதாக அறிவித்திருந்த பத்வா படி சல்மான் ருஷ்டி கண்ணை குருடாக்கிய இளைஞருக்கு ஈரானில் 1000 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்படுவதாக ஈரானில் பத்வா உத்தரவை நடைமுறைப்படுத்தும் அமைப்பு அறிவித்துள்ளது. அவர் இல்லாவிட்டால் அவரது வாரிசுக்கு அந்த நிலம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K