இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை....
இளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்து பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் ஒரு இளம் பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த மூன்று வாலிபர்கள் அவரிடம் சென்று ‘ இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.
மேலும், அவரின் ஆடைகளை கிழித்து அவரை அவமானம் செய்தனர். இந்த விவகாரம் வெளியே தெரிய வர, அந்நாட்டு பெண்கள் கொதித்து எழுந்தனர். என் ஆடை.. என் விருப்பம் என முழக்கமிட்டு போராட்டங்களை நடத்தினர். மேலும், அந்த மூன்று வாலிபர்களுக்கும் கடுமையான தண்டனையை அரசு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதியில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்ணின் ஆடையை கிழித்த 3 வாலிபருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். கென்யா நாட்டில் இதுபோன்ற குற்றத்திற்கு மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
1987ம் ஆண்டு முதல் கென்யா நாட்டில் யாருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை. சில கைதிகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கூட, ஆயுள் தண்டனையாக குறைத்து கென்யா ஜனாதிபதி உக்ரு சமீபத்தில் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.