எங்களுக்கு உங்களது பாடம் தேவையில்லை:நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு சிபிஐ சவுக்கடி
என்.டி.டி.வி நிர்வாக துணைத்தலைவர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, அதிரடியாக அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. இருவரும் இந்தியாவில் உள்ள வங்கியில் ரூ.48 கோடி கடன்பெற்று அதை வெளிநாடுகளில் உள்ள அவர்களது நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
இந்த நிலையில் மோடி ஆட்சியில் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் எழுதியிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள சிபிஐ செய்தி தொடர்பாளர் ஆர்.கே. கவுர், நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் 'பத்திரிகை சுதந்திரம் குறித்த பாடங்கள் இந்தியாவுக்கு உங்களிடமிருந்து தேவையில்லை. எங்களுடைய சமூக நிறுவனங்கள் மற்றும் மரபுகள் எங்களுடைய உயர்ந்த மற்றும் பல்வேறுவகையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகளால் வளர்க்கப்பட்டது' என தெரிவித்துள்ளார்.
மேலும் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடந்த போது முக்கியமான தகவல்களை என்டிடிவி இந்தி ஒளிபரப்பியதாகவும், பயங்கரவாத தாக்குதல் குறித்து பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவதால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஜனநாயகம் சமரசம் செய்யாதுஎன்றும் கவுர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.