அமெரிக்காவை பந்தாடிய பனிப்புயல்; இருளில் மூழ்கிய மக்கள்!
அமெரிக்காவில் வீசிய பனிப்புயலால் பல மாகாணங்கள் பனியில் மூழ்கியுள்ள நிலையில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் தொடங்கியுள்ள பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகின் காலநிலை வேகமாக மாறிவருகிறது. அதீத பனிப்பொழிவு, மழை, வெயில் என பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இந்த பாதிப்பு அதிகமாகவே உணரப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் வீசிய வரலாறு காணாத பனிப்புயல் காரணமாக பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டன. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், பனி மூடியதால் சாலை போக்குவரத்துகளும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். தற்போது பனிக்காலம் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும் கலிபொர்னியா மாகாணத்தை பனிப்புயல் பந்தாடி வருகிறது.
அமெரிக்கா மாகாணமான கலிபொர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் மணிக்கு 112 கி.மீ வேகத்திற்கு புயல் காற்று வீசியுள்ளது. மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. வீடுகள், சாலைகள் முழுவதும் பனி மூடியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில், விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புயல் வீசியதில் மின் கம்பங்கள் அறுந்து விழுந்ததால் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் 1.20 லட்சம் பேர் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர்.
Edit by Prasanth.K