1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (03:53 IST)

இந்தியர்கள் உத்வேகமாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் - அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்

இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உள்ளிட உலகத் தலைவர்கள் பலர் புகழாரம் சூட்டியுள்ளனர்.


 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு அஞ்சலியும், மரியாதையும்  செலுத்தும் வகையில், அமெரிக்காவில் உள்ள  வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரைகம்பத்தில்  பறக்க விடப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா மவுன அஞ்சலி  செலுத்தினார்.
 
இந்நிலையில், அப்துல் கலாம் மறைவையொட்டி, அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:–
 
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணத்திற்கு அமெரிக்க மக்களின் சார்ரபில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஒரு சாதாரண நிலையில் பிறந்து, வளர்ந்து, தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், ஒரு ஆராய்ச்சியாளராகவும், ராஜதந்திரியாகவும் இருந்து இந்தியாவின் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மதிப்பு மிக்க தலைவராக போற்றப்பட்டார்.
 
கடந்த 1962ஆம் ஆண்டு நாசாவுக்கு அப்துல் கலாம்  வந்த போது, இந்திய-–அமெரிக்க நல்லுறவு பலமாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதற்கான ஒத்துழைப்பை கொடுத்தார். இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி ஆய்வு கூட்டு முயற்சிகள் விரிவாக்கம் பெற அவர் பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
 
மேலும், இந்தியாவின் 11ஆவது ஜனாதிபதியாக கலாம் பதவி வகித்த போது, இந்திய-–அமெரிக்க நல்லுறவு அபரிமிதமான வளர்ச்சி பெற்றது.
 
அப்துல் கலாமின் தன்னடக்கமும், எளிமையும், பொதுச் சேவைக்கான அவரது அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்குமே உந்து சக்தியாக விளங்கியுள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இதே போல, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெப், சிங்கப்பூர் பிரதமர் லீ, வங்கதேச  பிரதமர் ஷேக் ஹசீனா, மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக், நேபாள  பிரதமர் சுஷில் கொய்ராலா, பூடான் பிரதமர்  செர்ரிங் டாப்கே, இஸ்ரேல் தூதர் டேனியல் கர்மேன், மாலத்தீவு தூதர் அகமது  முகமது உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்னர்.